புதுடெல்லி: பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டுள்ளதால், உலகின் பல விமான நிறுவனங்களுக்கு பொருளாதார நஷ்டம் உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதில், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய நிறுவனமான ‘ஏர் இந்தியா’ விமானப் போக்குவரத்து நிறுவனம்தான்.
இந்திய விமானப்படை பாகிஸ்தானின் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பாகிஸ்தானின் வான்வழிப் பாதை மூடப்பட்டது. இதனால், உலகளவில் பல விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒன்று, விமானம் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது சுற்றிச் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த முடிவு, பல விமான நிறுவனங்களைச் சேர்ந்த 400 விமானங்களின் பயணத் திட்டத்தை, தினசரி அடிப்படையில் பாதித்து வருகிறது. இதில் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு மட்டும், மார்ச் 16 வரையிலான தகவல்களின்படி ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா செல்லும் விமானங்கள், பாகிஸ்தான் வான்வழியைத்தான் பயன்படுத்தும். இப்போது அந்த வழி அடைபட்டுள்ளதால், அரபிக்கடலை சுற்றித்தான் செல்ல வேண்டியுள்ளது.
“எங்கேயோ தேள் கொட்டினால், எங்கேயோ நெறி கட்டுகிறது” என்ற பழமொழி நமக்கு நினைவுக்கு வந்தால் தப்பில்லை..!
– மதுரை மாயாண்டி