டெல்லி: ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர, இந்திய அரசு சார்பில், இன்று மதியம் 12.30 மணிக்கு  ஏர் இந்தியா விமானம் விமானம் புறப்பட்டு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் இருந்த வரைக்கும் பயங்ரவாதிகளின் கொட்டம் கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால், அமெரிக்க அதிபராக பைடன் பதவி ஏற்றதும், அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டன. இதற்கு பிறகு, அங்கு தலிபான்களின் ஆட்டம் அதிகமாகியது. கொஞ்சம், கொஞ்சமாக நாட்டை ஆக்கிரமித்து வந்த நிலையில், தற்போது நாட்டை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்த அதிபர் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து,போர் முடிவுக்கு வருவதாக தலிபான்கள் அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ள தங்களது நாட்டவர்களை மீட்க உலக நாடுகள் தனி விமானங்களை அனுப்பி அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.  இந்தியாவும் ஏர் இந்தியா விமானத்தை அனுப்பி அங்குள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது. நேற்று ஒரு விமானம் சென்று இந்தியர்களை அழைத்து வந்த நிலையில், அடுத்த விமானம் இன்று இரவு செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது,  முன்னதாக பிற்பகல் 12.30 மணிக்கே புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக அவசரகால பயன்பாட்டிற்காக இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.