கோழிக்கோடு: கோழிக்கோடு விமான நிலையில் தரையிறங்கும்போது ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தினைத் தொடர்ந்து மீட்பு பணியினர் வருவதற்குள் அந்த பகுதி மக்கள் களத்தில் இறங்கி மீட்புபணிகளை மேற்கொண்டு பலரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
விமான விபத்து நடந்த பின்னர் தகவல் அறந்து, போலீசார், தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய உயரதிகாரிகள், பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று அவர்களுக்கு உதவியாக காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்தவர்களும் சென்றிருந்தனர்.
இதற்கிடையில் விபத்து குறித்து அறிந்ததும், அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்புக் குழுக்கள் விரைந்து செல்வதற்கு முன்பு, டஜன் கணக்கான உள்ளூர்வாசிகள் ஏற்கனவே பலத்த மழையில் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
விபத்து காரணமாக சில பயணிகள் இருக்கைகளுக்கு இடையில் சிக்கி இருந்தனர். அவர்களை வெளியே கொண்டு வருவதில் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து பணியாற்றினர். விமானத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்துள்ளனர் அவர்களை மீட்டு குழந்தைகள் மற்றும் , பலத்த காயமடைந்த பயணிகளை டாக்சிகள் மற்றும் ஆம்புலன்ஸ்களில் விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கூறிய அந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவர், வாட்ஸ்அப்பில் நடந்த விபத்து குறித்து படித்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தாகவும், ஆனால், தான் அந்த இடத்திற்கு சென்று என்னால் முடிந்த உதவிகளை புரிந்தேன்இ தான் அங்கு சென்றபோது,விமானம் இரண்டு துண்டுகளாகப் பிரிந்து காணப்பட்டது என்று கூறியுள்ளார்.
அதுபோல விமான நிலைய பிரிபெய்ட் டாக்சி டிரைவரான பஷிர் என்பவர் கூறும்போது, விபத்து தொடர்பாக பயணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில் அனைத்து டாக்சி களையும் விமான நிலையத்திற்கு வர ஏற்பாடு செய்ததாகவும், முதலில், காயமடைந்தவர்களில் பலர் அருகிலுள்ள மெர்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் பல பயணிகளின் அடையாளம் கேட்டு வாட்ஸ்அப் குழுக்களில் ஏராளமான தகவல்கள் பரவி வந்ததாகவும், தாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நபர்கள் குறித்தா தகவல்களை வாட்ஸ்அப் குழுவில் தெரிவித்து, அதிகம் பேருக்கு பகிர வேண்டுகோள் விடுத்ததாக வும் கூறினார்.
அதுபோல, ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட நபருடன் சென்ற உள்ளூர்வாசி ஒருவர், தாங்கள் தற்போது, பொன்னானி குடியிருப்பாளரான ஹென்னா மற்றும் அவரது இரண்டு வயது மகளை காலிகட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம், தயவுசெய்து அவரது உறவினர்கள் உடனடியாக அவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு வாய்ஸ் மெசேஜ் கொடுத்து, அதை வாட்ஸ் அப்பில் அனுப்பி பகிரும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்புகும் பணிஅந்த பகுதி மக்களின் பேராதரவுடன் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர்களில் 70% க்கும் அதிகமானவர்களை அவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த மாபெரும் செயலை புரிந்த மலப்புரம் மக்களின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.
அவசர காலத்தின்போது, அந்த பகுதி மக்கள் கடும் மழையையும் பொருட்படுத்தாது, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி புரிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆம், அதே மலப்புரம், சமீபத்தில் ஒரு பாஜக தலைவரால் இந்தியாவின் மிக வன்முறை மாவட்டமாக இழிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா துயரில் இருந்து மாநில மக்கள் மீள்வதற்குள், மாநிலத்தில் கடுமையான இயற்கை பேரிடர் நிகழ்வுகளும் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது இந்த விமான விபத்தும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.