டெல்லி: அமெரிக்காவின் 5G சேவையால் விமான சேவைகள் குறைக்கப்படுவதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 5ஜி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் 5ஜி இணைய சேவை சென்னை உள்பட 13 நகரங்களில் தொடங்க உள்ளதாக ஏற்கனவே மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
5G நெட்வொர்க் (5G Network) உள்ளதன் காரணமாக சில முக்கியமான விமானக் கருவிகள் செயலிழக்கச் செய்யக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 5G மொபைல் போன் சேவைகளால், விமானங்களுக்கு “பெரிய இடையூறு” ஏற்படும் என்றும் குறிப்பாக மோசமான வானிலையில் போது விமானங் களின் செயல்பாடுகளை, C-band 5G சிக்னல்கள் சீர்குலைக்கும் என்று 10 அமெரிக்க விமான சேவை நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. 5G குறுக்கீடு, விமானத்தின் உயர அளவீடுகளை பாதிக்கலாம் என்று பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) எச்சரித்துள்ளது.
இது உலக விமான சேவை நிறுவனங்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளன. முக்கிய சர்வதேச விமான நிறுவனங்கள் நேற்று இது தொடர்பாக ஆலோசித்து, அமெரிக்காவிற்கான விமானங்களை மறுசீரமைக்க அல்லது ரத்து செய்வது என முடிவெடுத்துள்ளன. வயர்லெஸ் அறிவிப்புகளை அடுத்து FAA புதிய முறையான வழிகாட்டல்களை வழங்காத வரை மேலும் ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, AT&T மற்றும் Verizon விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள சில 5G டவர்களை இயக்குவதை தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளன
இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய போயிங் 777 ஆபரேட்டரான துபாயின் எமிரேட்ஸ், 5ஜி வயர்லெஸ் சேவைகளைப் தொடக்குவதாக திட்டமிட்ட தேதியான ஜனவரி 19 முதல் அமெரிக்காவில் உள்ள ஒன்பது இடங்களுக்கான விமானங்களை நிறுத்துவதாகக் கூறியது.
நியூயார்க்கின் JFK, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் வாஷிங்டன் DC ஆகிய இடங்களுக்கு எமிரேட்ஸ் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும். ஜப்பானின் இரண்டு பெரிய விமான நிறுவனங்களான, ஆல் நிப்பான் ஏர்வேஸ் (All Nippon Airways) மற்றும் ஜப்பான் ஏர்லைன்ஸ் (Japan Airlines), போயிங் 777 விமானங்களை குறைப்பதாக தெரிவித்தன.
அதைத்தொடர்ந்து, ஏர் இந்தியாவும் விமான சேவைகளை குறைப்பதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா இன்று (ஜனவரி 19) அமெரிக்கா செல்லும் பல விமானங்களை ரத்து செய்வதாக என தெரிவித்துள்ளது.
Delhi-JFK-Delhi மற்றும் Mumbai-EWR-Mumbai விமானங்களை இயக்க முடியாது என்று விமான நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் பதிவிட்டதன் மூலம் பயணிகளுக்கு தெரிவித்துள்ளது.