புதுடெல்லி:

பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏர் இந்தியா சேர்மன் அஸ்வனி லோஹானி எச்சரித்துள்ளார்.


கடந்த 5-ம் தேதி பெண் கேப்டன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் எழுந்தது.
விமான ஓட்டுநர் பயிற்சியாளர் ஒருவர், ஐதராபாத்தில் பயிற்சி நிறைவு பெற்ற பின், பெண் கேப்டனை உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.

இதனையடுத்து, பெண் கேப்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஏர் இந்தியா விமான நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா விமான நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஏர் இந்தியா நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், சமீப காலமாக பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருவது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஏற்க முடியாது.

அனைவரது கவுரமும் காப்பாற்றப்பட்டு சிறந்த சேவையை அளிக்க வேண்டும். துன்புறுத்தலில் இருந்து விடுபட்டு, அனைவரும் கவுரவத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஏர் இந்தியா நிறுவன தலைவர் அஸ்வனி லோஹானி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்துக் கொள்ள முடியாது.

தவறு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இது போன்ற செயல் வரவேற்கக் கூடியது அல்ல. பாலியல் துன்புறுத்தல்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே செய்தாலும் தவறுதான் என்று கூறியுள்ளார்.