மும்பை
ஏர் டெக்கான் விமான நிறுவனம் மீண்டும் தனது சேவையை துவங்குகிறது.
ஏர் டெக்கான் விமான நிறுவனம் கடந்த 2003 ஆம் வருடம் கோபிநாத் என்பவரால் துவங்கப்பட்டது. 2008 ஆம் வருடம் பொருளாதாரப் பிரச்னையால் இந்த நிறுவனம் விஜய் மல்லையா நடத்தி வந்த கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உடன் இணத்துக் கொண்டது. தற்போது ஏர் டெக்கான் விமான நிறுவனம் மீண்டும் தனது சேவையை வரும் டிசம்பர் 22ஆம் தேதி முதல் துவக்க உள்ளது.
இந்த நிறுவனத்தின் முதல் சேவை மும்பை – நாசிக் வழித்தடத்தில் முதலில் துவங்க உள்ளது.
மத்திய அரசின் “உடான்” சேவையை தற்போது பல விமான நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. இந்த உடான் சேவை என்பது சிறிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் என்பதே ஆகும். இந்த திட்டத்தின் படி ஒரு மணி நேரப் பயணத்துக்கான விமானக் கட்டணம் ரூ.2500 என குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏர் டெக்கான் நிறுவனத் தலைவர் கோபிநாத், “எங்களின் முதல் சேவை மட்டுமே உடான் திட்டத்தின் கீழ் வரும் கடைசி சேவை ஆகும். அதன் பின் மேலும் விலை குறைந்த சேவைகள் அறிமுகப் படுத்த உள்ளது. மும்பையில் இருந்து நாசிக் செல்லும் 40 நிமிட பயணத்துக்கு ரூ. 1400 மட்டுமே வசூலிக்கப்படும். சில அதிர்ஷ்டக்காரப் பயணிகளுக்கு அந்தக் கட்டணம் வெறும் ஒரு ரூபாயாக இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.