சென்னை: வங்கக் கடலில் காற்று சுழற்சி  நிலவுவதால்,  தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவம தொடங்கியது முதல் வெயில் கொளுத்தி வருகிறது.  இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சுட்டெரிக்கும் வெயிலை குறைக்கும் வகையில் நாளை (25ந்தேதி) முதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் திங்கள்கிழமை (பிப்.24) வறண்ட வானிலையே காணப்படும். மேலும் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். இதற்கிடையே வங்கக்கடலில் நிலவும் காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் செவ்வாய்க்கிழமை (பிப்.25) முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை தமிழகத்தின் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கும், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.24) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். பிப்.24 முதல் பிப்.27-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.