விருதுநகர்: நாளை ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தார்களுக்கு  4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பதினெண் சித்தர்கள் சதுரகிரி மலையில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் இம்மலை சித்தர்கள் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. சதுரகிரி மலையில் உள்ள சந்தன மகாலிங்கம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள லிங்கம் சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்படுவதால் சந்தன மகாலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. சதுரகிரி மலையில் உள்ள கல்லால மரம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இம்மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி மூலவர் சன்னதியில் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னதியில் ஆனந்தவல்லி அம்மன் அருள்பாலிக்கிறார். மலைப்பாதையில் சந்திரகாந்தேஸ்வரர், சங்கரநாராயணர், ராமதேவர், வள்ளி தெய்வானை சமேத முருகன், விநாயகர் போன்ற பல தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன.

மலையேறுவது ஒரு தனித்துவமான அனுபவம். மலையேறும் போது இயற்கையின் அழகை ரசிக்கலாம்.  இக்கோவில்  கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.  பக்தர்கள்   கோயிலுக்கு செல்ல  3 மலைப்பாதைகள் உள்ளது. அதன்படி,  மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன.

மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த கோவிலில் இரவில்   தங்க அனுமதி கிடையாது. மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி வழங்கப்படாது.

இந்த நிலையில்,  ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (நவ. 13) முதல் 16ம் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது

‘பக்தர்கள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே மலையேறிச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும்,   கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது., இரவில் கோயிலில் தங்க அனுமதி கிடையாது  என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள காலங்களின்,  மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்’’ என்றும் மாவட்ட நிர்வாகமும்  வனத்துறையினரும்  தெரிவித்துள்ளனர்.