மதுரை,
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய சுகாதார செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதுபோல மதுரை ஐகோர்ட்டு கிளையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிடக்கோரி ஆர்.கே.பாஸ்கர் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தகுதியான இடத்தை தேர்வு செய்ய தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தமிழகஅரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடங்கள் தேர்வு செய்யப் பட்டு மத்திய அரசுக்கு ஏற்ககனவே பட்டியல் அனுப்பப்பட்டது என்றும், அந்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்ததாகவும், எந்த இடம் என்பதை மத்தியஅரசுதான் அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
அதையடுத்து, மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, மத்திய துணைக்குழு 5 இடங்களிலும் ஆய்வு நடத்தி 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக 1.1.2018ல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றாததால் மத்திய அமைச்சரவை செயலர் பிரிதீ சுதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி கே.கே.ரமேஷ் உயர் நீதி மன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு , இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்