விருதுநகர்: அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை இதோ என்று பிரச்சாரத்தின் போது செங்கல் ஒன்றை கையோடு கொண்டு வந்து காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சாத்தூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் ரகுராமனை ஆதரித்து சாத்தூர் நகர்ப்பகுதியில் வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனையை கையில் வைத்துக் காட்டியது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதிமுக, பாஜக கட்சிகள் இணைந்து மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்துள்ளேன் என்று கூறி ஒரு செங்கலை கையில் வைத்தபடி மக்கள் முன்னே காட்டினார். இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி 2 ஆண்டுகளுக்கு முன்பாக அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]