டில்லி
கொரோனா வைரஸ் தொற்று குறித்து உலவி வரும் பல நம்பிக்கைகள் குறித்த உண்மைகளை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் படு வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சீன மக்கள் சகட்டு மேனிக்கு பாம்பு உள்ளிட்ட பல மாமிசங்களைச் சாப்பிட்டது, மற்றும் அங்குள்ள வெப்ப நிலை ஆகியவை என பல செய்திகள் நிலவி வந்தன. குறிப்பாகச் சைவ உணவு மட்டும் உண்பவர்களையும் மிகவும் அதிக வெப்பம் உள்ள நாடுகளையும் கொரோனா தாக்காது என நம்பப்படுகிறது.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலேரியா, “கொரோனா வைரஸ் சைவம் மற்றும் அசைவம் என அனைத்து வகை உணவுகளிலும் பரவக்கூடியதாகும். எனவே அனைத்து பொருட்களையும் நன்கு கழுவி முழுவதுமாக வேக வைக்க வேண்டும். சுகாதாரம் மட்டுமே இதில் முக்கிய பங்கு வகிக்கிறதே தவிரக் குறிப்பிட்ட வகை உணவுகளால் மட்டும் பரவுகிறது என்பது தவறாகும்.
அதைப் போல் அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் இருக்காது எனக் கூறப்படுவது தவறாகும். கொரோனா வைரஸ் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வீரியம் குறையும் எனக் கூறப்படுவது சரி இல்லை. சிங்கப்பூர் போன்ற மிகவும் வெப்பமான பகுதிகளில் உள்ள கொரோனா தாக்கமும் மிகவும் குளிர்ந்த பகுதியான ஐரோப்பாவில் உள்ள கொரோனா தாக்கமும் சமமாகவே இருக்கும்.
அடுத்ததாக ஒரு பகுதியில் வசிப்பவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியில் உள்ள அனைவருமே பாதிக்கப்பட மாட்டார்கள். பாதிப்பு அடைந்தவருடன் எவ்வித தொடர்பும் இல்லை எனில் அவர்களை கொரோனா தொற்றாது.
லவங்கம் மற்றும் சில மூலிகைப் பொருட்களுக்கு கொரோனா தடுப்புக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. லவங்கம் உள்ளிடவைகளை உட்கொண்டால் கொரோனா தாக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாஹ்டு. அதைப்போல் மது அருந்துவோரை கொரோனா தாக்காது என்பதும் தவறானதாகும். .
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அடிக்கடி கைகளை கழுவுதல் நல்ல பயன் அளிக்கும். சோப மூலம் கை கழுவுவது அவசியமாகும். ஆனால் சோப் இல்லாத இடங்களில் கை சுத்திகரிப்பான் பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளார்.