சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில், அ.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு வருகிற 28-ந்தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டு கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேரங்கள், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், திமுக, அதிமுக கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களையும் முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், அதிமுக சார்பில் வரும் 28ந்தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் கூட்டணி கட்சிகளான பாஜக, தேமுதிக, பாமக, புதிய நீதிகட்சி, முக்குலத்தோர் பூலிப்படை, தமாகா, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, ஆகியவை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது.
கூட்டணி கட்சி தலைவர்களையும் பங்கேற்க செய்யும் வகையில், விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார்படுத்தப்பட்டு, அதற்கான பூமி பூஜை போடப்பட்டு, மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் தொண்டர்களை திரட்டுவதற்காக அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த மாநாடு, தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
அதிமுக சார்பில், 1998-ல் நெல்லையில் ஜெயலலிதா தலைமையில் கட்சியின் வெள்ளி விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு, அ.தி.மு.க. வெற்றிக்கு திருப்பு முனையாகவும் அமைந்ததாக கூறப்படுகிறது. அதுபோல, மீண்டும் ஒரு மாநாட்டை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் முயற்சி மேறகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் வருகிறது. வருகிற 28-ந்தேதி தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் ஊட்டி ராணுவ கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதை முடித்துக்கொண்டு, அதிமுக மாநாட்டில் அவர் கலந்துகொள்ளும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.