நெல்லை: திமுகவினரின் மிரட்டல் காரணமாக ஹெல்மெட்டுடன் வந்து கவுன்சிலராகபதவி ஏற்ற திசையன்விளை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றி உள்ளது. 2 சுயேச்சைகளை திமுக தன்வசப்படுத்திய நிலையில், திசையன்விளை பேரூராட்சி தலைவராக அதிமுகவின் ஜான்சிராணி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.
18 வார்டுகளைக் கொண்ட திசையன்விளை பேரூராட்சியில் திமுக, காங்கிரஸ் சார்பில் தலா 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர். அதிமுகவில் 9 பேர் மற்றும் பாஜகவை சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர். தேமுதிக ஒரு சீட்டும் 3 பேர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்களில் 2 சுயேட்சைகள் சமீபத்தில் திமுகவில் இணைந்தனர். திமுக சார்பில் தலைவர் வேட்பாளராக சுயேச்சை வேட்பாளர் கமலா நேரு வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
அதிமுக சார்பில் மாவட்ட மகளிரணி செயலாளரும், பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலருமான ஜான்சி ராணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று காலை பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 2 பேருக்கும் தலா 9 ஓட்டுகள் கிடைத்தது. இதையடுத்து குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. இதில், பேரூராட்சி தலைவராக அதிமுக ஜான்சிராணி தேர்வானார்.