சென்னை: அதிமுக நட்சத்திர பேச்சாளரும், பிரபல நகைச்சுவை நடிகருமான  செந்தில், அதிமுகவில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்தார். இது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான செந்தில், நடிகர் கவுண்டமணியுடன்  இணைந்து நடித்தவர். இவர்களின் காமெடிக்கு பட்டிதொட்டி எங்கும் இன்றுவரை ரசிகர்கள் உண்டு. இவர் ஜெ. முதல்வராக இருக்கும்போது, அதிமுகவில் இணைந்து, நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். கடந்த பல தேர்தல்களில் அதிமுகவினர்களுக்காக  பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், அதிமுக கட்சி இரண்டாகப் பிரிந்தபோது, அதிமுகவில் இருந்து விலகி அமமுக-வில் இணைந்தார். ஆனால், அங்கும் அதிருப்தி ஏற்பட்டதால், பின்னர் அங்கிருந்து  விலகி கடந்த ஆண்டு   மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். அதைத்தொடர்ந்து ஓரங்கப்பட்டு வந்த நடிகர் செந்தில்,  இன்று  அதிமுகவில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியில், அரசியல் பிரபலங்களை இணைப்பதை விட திரையுலக நட்சத்திரங்களை கட்சியில் சேர்ப்திலேயே அதிக ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனேவ குஷ்பு கவுதமி, காயத்ரி ரகுராம் உள்பட பலர் உள்ள நிலையில், சமீபத்தில் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், பிரபல தயாரிப்பாளருமான ராம்குமார் குடும்பத்தோடு பாஜகவில் இணைந்தார். மேலும் நடன இயக்குநர் கலா,  பிரபல நடிகை ராதா, மற்றும் குணச்சித்திர நடிகர் தேவன், பாலிவுட் பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தி போன்றோர் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில்,  நகைச்சுவை நடிகர், செந்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து தன்னை பாஜக கட்சியில் சற்றுமுன் இணைத்து கொண்டுள்ளார்.  அவரக்கு பாஜக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

நடிகர் செந்தில், சட்டமன்ற தேர்தலில்  பாஜகவுக்கு ஆதரவாக சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது