ஜெ., மருத்துவ செலவு ரூ. 6 கோடி!! அப்பல்லோவுக்கு அ.தி.மு.க. செலுத்தியது

சென்னை:

கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 6 மாதங்கள் கழித்து இதற்கான மருத்துவமனை கட்டணமான ரூ. 6 கோடியை அ.தி.மு.க அம்மா அணி தற்போது செலுத்தியுள்ளது.

இதற்கான காசோலையை அ.தி.மு.க தலைமை நிலைய பிரதிநிதி மூலம் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார். இந்த மருத்துவ செலவு ரூ. 5 கோடி முதல் ரூ. 5.5 கோடி செலவானதாக கடந்த பிப்ரவரி மாதம் பாலாஜி என்ற அரசு மருத்துவர் தெரிவித்திருந்தார்.

இந்த மருத்துவ கட்டண பில் ஜெயலலிதாவின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். குடும்பத்தார் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. கட்டணம் முழுவதும் செலுத்தப்பட்டதா? இல்லையா? என்பதையும் பாலாஜி அப்போது தெரிவிக்கவில்லை.

கடந்த 1984-85ம் ஆண்டில் சென்னை மற்றும் நியூயார்கில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அரசு சார்பில் செலவு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த தொகையை அரசுக்கு கட்சி வழங்கிவிட்டது என்று வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

1984ம் ஆண்டு நவம்பர் முதல் 1985ம் ஆண்டு பிப்ரவரி வரை அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3 மாதங்கள் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்று திரும்பினார். சென்னை திரும்பிய பிறகு ஒன்றரை மாதம் கழித்து 1985ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி அமெரிக்காவில் சிகிச்சைக்கு செலவான ரூ. 92 லட்சத்தை அ.தி.மு.க சார்பில் அரசுக்கு செலுத்தப்படும் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தார்.

அமெரிக்கா செல்வதற்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 1984ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை அவர் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவ செலவுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், இதர நிர்வாகிகள் அனைவரது பங்களிப்பையும் அளிக்குமாறு எம்.ஜி.ஆர் அப்போது அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary
AIADMK settles ₹6 crore bill towards Jaya’s hospitalisation