சென்னை: தமிழ்நாடு அரசு முன்தேதியிட்டு அமல்படுத்தி உள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூலை 23-ல் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில், 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தி திமுக அரசு அறிவித்து உள்ளது. இந்த மின் கட்டண யர்வு ஜுலை 1ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக கூறியுள்ளது. அதனப்டி, வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறை யாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிப்பதைக் கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்தும்; நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், வருகின்ற ஜூலை 23 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.