சேலம்: முன்னாள் அதிமுக ஜெயக்குமார் கைதைக் கண்டித்து சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, முன்னாள் அமைச்சர் செம்மலை திடீரென மயங்கி விழுந்தார். சுட்டெரித்த வெயிலால் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்  கள்ள ஓட்டு போட முயற்சித்த திமுக உறுப்பினரை தாக்கியதாககூறி, அவர் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. தொடர்ந்து அவர் மீது அடுத்தடுத்து வழக்குகளை போட்டு திமுக அரசு சிறையில் அடைத்து உள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், இது பழிவாங்கும் செயல் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அதிமுக சார்பில், இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, சேலம் கோட்டை மைதானத்தில்  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுட்டெரிக்கும் வெயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருந்தபோது, அவரது அருகில் நின்றுகொண்டிருந்த முன்னாள் அமைச்சர் செம்மலை திடீரென மயங்கி விழுந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் கைகளால் தாங்கி, நிழல் பகுதிக்கு தூக்கி சென்று, முதலுதவி செய்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.