சென்னை: அதிமுக பாமக கூட்டணி உறுதியானது. இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி  அதிமுக மீண்டும ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே உள்ளன. அதன் காரணமாக அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடுகள்  நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகள் தொடரும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக ஏற்கனவே இணைந்த நிலையில், இன்று பாமகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அன்புமணி தலைமையிலான பாமக அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகி உள்ளது.

முன்னதாக இன்று காலை  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு அன்புமணி  தலைமையிலான பாமக தலைவர்கள் வழக்கறிஞர் பாலு, திலகபாமா  வருகை தந்தனர். அதுபோல அதிமுக  தலைவர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோரும் வருகை தந்தனர்.  இரு தரப்பினரும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,‘ அதிமுக – பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது என்றவர்,  “ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தற்போது பாமகவும் கூட்டணியில் இணைந்துள்ளது. இது இயற்கையாக அமைந்த கூட்டணி  என்றவர், எங்களுக்கு இடையேயான  தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டோம், பின்னர் அறிவிப்போம் என்றவர், எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும். தொகுதிகளின் எண்ணிக்கை பிறகு முடிவு செய்யப்படும் என்றதுடன், மக்கள் விரோத திமுகவை அகற்றும் நோக்கில் கூட்டணி அமைப்பு. வலிமையான தமிழகத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். மேலும் சில கட்சிகள் விரைவில் எங்கள் கூட்டணியில் சேரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி,  எங்கள் தொண்டர்கள் விரும்பிய அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்திருக்கிறது. திமுக மீது மக்கள் கோபத்தில், ஆத்திரத்தில் உள்ளது எங்கள் நடைபயணத்தின்போது தெரிந்தது. உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்; அதிமுக ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

[youtube-feed feed=1]