சென்னை: அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு கொடுத்துள்ளார்.

அதிமுக கட்சி விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தலைமை தேர்தல் ஆணை யத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அவரது மனுவில்,  அதிமுக கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோரால் தொடரப்பட்டுள்ள சிவில் சூட் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அதிமுக கட்சியின் ஜூலை 11 பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால், அதே வேளையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அதிமுக கட்சி தொடர்பான சிவில் சூட் வழக்குகள் மெரிட் அடிப்படையில் சட்ட விதிகளுக்குட்பட்டு சுதந்திரமாக நடைபெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், அதிமுக கட்சி தொடர்பாக நிலுவையில் உள்ள சிவில் சூட் வழக்குகள் முடிவடையும் வரை, கடந்த 2022ம் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மூலம் அ.தி.மு.க கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது. அதேபோல, கடந்த 29-04-2022ல் சமர்பிக்கப்பட்ட உட்கட்சி தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க கூடாது. மேலும் கடந்த 1-12-2021ல் செயற்குழு மூலம் திருத்தப்பட்ட கட்சி விதிகளை அங்கீகரிக்கக் கூடாது. அதேபோல, 12-09-2017ல் பொதுக்குழு கூட்டம் மூலம் திருத்தப்பட்ட கட்சி சட்ட விதிகளை ஏற்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கட்சி தொடர்பாக நிலுவையில் உள்ள சிவில் சூட் வழக்கு விசாரணை முடியும் வரை கட்சி சின்னம்கோரும் எந்த மனுக்களையும் ஏற்கக்கூடாது எனவும் தனது மனுவில் ராம்குமார் ஆதித்தன் கோரிக்கை வைத்துள்ளார்.