சென்னை: அதிமுக எம்.பி. தம்பிதுரை  கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அதிமுக எம்.பி. தம்பித்துரை பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதற்காக அவர்,  அவரது நிலத்தை சுற்றிஉள்ள அரசு புறம்போக்கு நிலங்களையும் மடக்கி  கட்டிடங்கள் கட்டி உள்ளார். இதை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க வேண்டுமென திருவள்ளூர் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு கோனம்பேடு கிராம பொது நல சங்கத்தின் தலைவரான ஜி.கருணாநிதி  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  கடந்த 2021-ம் ஆண்டு  பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அவரது மனுவில், “எங்கள் கிராமத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான செயின்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி மையம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கல்வி நிறுவனங்களுக்காக மின்சார துணை நிலையம் அமைக்கவும், பாதை அமைக்கவும், மாணவ, மாணவியருக்கான தங்கும் விடுதிகள் கட்டவும், சுற்றுச்சுவர் கட்டவும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள், நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

ஆனால் எங்கள் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வகம், கூடுதல் வகுப்பறைகள், மாணவர்களுக்கான கூடுதல் கழிப்பறைகள் என எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளது.

எங்கள் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் போன்ற வசதிகளும் இல்லை. எனவே தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்டு, அவற்றை அரசு பள்ளியின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.சுரேந்தர்  அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.  விசாரணை யின்போது திருவள்ளூர் ஆட்சியர் எம்.பிரதாப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான 2,476 சதுர மீட்டர் அளவுக்கு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து அதில் கல்லூரிக்கான கட்டிடங்களையும், பாதை மற்றும் சுற்றுச்சுவரையும் அமைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி சம்பந்தப்பட்ட அரசு நிலங்களை மீட்க ஆவடி வட்டாட்சியர், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், எப்போது அகற்றப்படும் என தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, ஆட்சியரின்  அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் வசம் உள்ள அரசு நிலங்களை 12 வார காலத்துக்குள் மீட்க வேண்டுமென திருவள்ளூர் ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

[youtube-feed feed=1]