டெல்லி: அதிமுக எம்பியான சசிகலா புஷ்பா திடீரென பாஜகவில் சேர்ந்திருக்கிறார். இது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாட்டில் தமிழகத்தில் மட்டும் தான் பாஜக வளராமல் தொடக்க நிலையிலே தவழ்ந்து வருகிறது. எந்த தேர்தல் என்றாலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்து தோல்வி அடையும் நிலையிலேயே உள்ளனர்.
இதையடுத்து, கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளில் பாஜக துரிதமாக இறங்கியது. இதுதொடர்பாக பல கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களை வளைக்கும் நடவடிக்கைகளில் குதித்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் பாஜகவில் இணைந்து ஆச்சரியப்படுத்தினர்.
இந் நிலையில், அதிமுக மாநிலங்களவை எம்பியான சசிகலா புஷ்பா திடீரென பாஜகவில் தம்மை இணைத்துக் கொண்டார். டெல்லியில் முரளிதர ராவ், பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
இது குறித்து பேசிய பொன் ராதாகிருஷ்ணன், சசிகலா புஷ்பாவின் வருகை தமிழக பாஜகவை வலுப்படுத்தும் என்று மகிழ்ச்சி தெரிவித்தார். சசிகலா புஷ்பா போன்று மேலும் பல முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் விரைவில் பாஜகவில் இணைவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.