சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில், ‘யார் அந்த சார்?’ என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்,, கவனர் வெளியேறியதும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக பதாதைகளுடன் கோஷமிட்ட நிலையில், அவர்கள் அவைக்காவலர்கள் மூலம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனன இது பரபரப்பை ஏற்படுத்தியது.
நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏக்கள் வருகை தனர். ஆளுநரும் வருகை தந்தார். அவரை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சரியாக 9.30 மணிக்கு அவை தொடங்கியது. அப்போது கவனருக்கு எதிராக, காங்கிரஸ், அதிமுக உள்பட சில கட்சி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையில் தமிழ்த்தாய் வாழ்த்து படித்து, அவை தொடங்கியது. ஆனால், தேசிய கீதம் பாடப்படவில்லை என கூறி, ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய சில நேரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய நிலையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க தொடங்கினார். தமிழக அரசின் திட்டங்கள் குறித்து வாசிக்க தொடங்கினார்.
இதற்கிடையில், யார் அந்த சார்? என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள், பேரவையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றதும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக கண்டன பதாகைகள் ஏந்திய படி முழக்கமிட்டனர். அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டபடி சபாநாயகரின் இருக்கையை நோக்கி வந்தனர். அவர்களை சபாநாயகர் அப்பாவு, அவர்களை இருக்கையில் அமருமாறு திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் இருக்கையில் அமராமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள். அவையில் குத்தகம் விளைவிக்க திட்டம் போட்டு செயல் படுகிறீர்கள். இதை அனுமதிக்க முடியாது. நீங்கள் இருக்கைக்கு சென்று அமராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆனால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், இருக்கைக்கு செல்லாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் சபாநாயகர் அப்பாவு, அவர்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சபை காவலர்கள் உள்ளே வந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக தூக்கி வெளியேற்றினார்கள். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரையை தமிழில் வாசித்தார்.