சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னை விருக்கம்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.என்.ரவி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆளும் அதிமுகவினர் அதிகாரிகளுக்கு தெரியாமல், மறைமுகமாக பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி, வாக்குகளை பெற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக திமுக தரப்பு குற்றஞ்சாட்டி வருவதுடன் தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களையும் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகின்றனர்.
சமீபத்தில் அமமுக சார்பில் அனுப்பப்பட்ட 2 லாரிகள் நிறைய குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பல இடங்களில் ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட பணங்களும் பறிமுதுல் செய்யப்பட்டு வருகிறது., நேற்று முன்தினம் விராலிமலையில் அமைச்சர் விஜய பாஸ்கரின் ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களை வழங்குவதாகவும் செய்திகள் பரவின.
இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் அதிமுக எம்எல்ஏ வி.என்.ரவி வீட்டில் தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக திமுக புகார் அளித்ததை அடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.