சென்னை: கும்மிடிபூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் பவாரியா கொள்ளையவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘கும்மிடிபூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் அமைச்சருமான சுதர்சனம் கொலை வழக்கு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் வடமாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள்  என்பது தெரிய வந்தது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு சுதர்சனம் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். சுதர்சனத்தை காப்பாற்ற வந்த அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கிவிட்டு 62 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது, இந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த கொள்ளையர்களை பிடிக்க   அப்போதைய ஐஜி ஜாங்கிட் தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிரமாக செயல்பட்ட இந்த படைகள் ஒரே மாதத்தில் கொள்ளையடித்த கும்பல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடித்தது. ஹரியானா, ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார் பவாரியா கொள்ளையர்களை சுட்டுபிடித்தனர். அரியானா மாநிலத்தை சேர்ந்த முக்கியக் குற்றவாளியான ஓம் பிரகாஷ் அவரது சகோதரர் ஜெகதீஷ், ஜெயிந்தர் சிங், ராகேஷ், அசோக், உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலைத் தனிப்படையினர் ராஜஸ்தானில் தட்டி தூக்கினர்.  அவர்களை கைது செய்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தனர்.

இந்த கொலை வழக்கில், ஜாமினில் வெளிவந்த மூன்று பெண்கள் தலைமறைவாகிவிட்டனர்.  மூன்று பேர் குற்றவாளிகள் என கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சென்னை அமர்வு நீதிமன்றம்.

20 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓம் பிரகாஷ் உள்ளிட்ட 2 பேர் புழல் சிறையிலேயே மரணம் அடைந்தனர். இதனையடுத்து மீதமுள்ள ஜெயில்தார் சிங், ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் மீதான வழக்கு விசாரணை முடிந்து அவர்கள் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், குற்றவாளிகள் ஜெயில்தார் சிங் ,ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஆப்ரஹாம் லிங்கம் தீர்ப்பளித்தார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது பரபரப்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது.