சென்னை: திமுக அரசின் பட்ஜெட்டை விமர்சித்து பேரவை வளாகத்தில்  இன்று அதிமுக எம்எல்ஏக்கள் ‘காதுகுத்து விழா அழைப்பிதழ்’ ஏந்தி போராட்டம்  நடத்தினர்.  இது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு ‘காதுகுத்து விழா’ அழைப்பிதழுடன் பேரவைக்கு வருகை தந்து கவனம் ஈர்த்தனர். இது பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக பணியாற்றி வருகின்றன. இதற்கிடையில், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தொடர்ந்து மாநில அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏ-க்கள், அதை அனைவரும் பார்க்கும்படி கைகளில் ‘காதுகுத்து விழா’ அழைப்பிதழை ஏந்தி வந்தனர். இது செய்தியாளர்கள் மற்றும் தலைமைச்செயலகம் ஊழியர்களிடையே, என்ன காதுகுத்து விழா என விசாரித்து அறிந்தனர். அப்போதுதான், அது திமுக அரசின் பட்ஜெட்டை விமர்சித்து, அதிமுக நடத்திய நூதன போராட்டம் என்பது தெரிய வந்தது.

இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சட்டபேரவைக்கு வெளியே பட்ஜெட்டை விமர்சிக்கும் வகையில் ஸ்டாலின் காது குத்து விழா என்ற பெயரில் அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக,  சட்டப்பேரவை வளாகத்தில் இன்று காலை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், ‘சட்டப்பேரவையில் காதுகுத்து விழா’என்ற விழிப்புணர்வு போராட்டம் நடத்தினர்.

கடந்த நான்கரை ஆண்டுகாலத்தில் பட்ஜெட் என்ற பெயரில் தமிழக மக்களுக்கு திமுக அரசு காது குத்தியுள்ளதாக ’’கடந்த நான்கரை ஆண்டுகளாக பட்ஜெட் எனும் பெயரில் தமிழ்நாட்டு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காதுகுத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த அழைப்பிதழிலில்,  “கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

நாள்: பிப்ரவரி 17, 2026, இடம்: தமிழக சட்டமன்றம், நேரம்: காலை 10 மணி முதல்.

இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார்.

மேற்படி விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.

பி.கு: சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் ‘மொய்’ வைக்கலாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிதழுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏ-க்கள், அதை அனைவரும் பார்க்கும்படி கைகளில் ஏந்தி வந்தனர். இது பேரவை வளாகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

[youtube-feed feed=1]