ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பகல் 1.30 மணி நிலவரப்படி திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91,975 பதவிகளை நிரப்புவதற்காக இரு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. முதற்கட்ட தேர்தலில் 76.19% வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகியிருந்தன. இரு கட்டத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பகல் 1.30 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு பொறுப்புகளில் திமுக 78 இடங்களிலும், அதிமுக 37 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், அமமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 5,067 ஊராட்சி ஒன்றிய வார்டு பொறுப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 141 இடங்களில் திமுகவும், 137 இடங்களில் அதிமுகவும், 5 இடங்களில் பாமகவும், 4 இடங்களில் தேமுதிகவும், 2 இடங்களில் அமமுகவும் முன்னிலை வகித்து வருகின்றன.
வெற்றி நிலவரங்களை பொருத்தவரை மாவட்ட ஊராட்சி வார்டு பொறுப்புகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. ஊராட்சி ஒன்றிய வார்டு பொறுப்புகளுக்கான முடிவுகளில் அதிமுக 50 இடங்களிலும், திமுக 38 இடங்களிலும், அமமுக 5 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.