சென்னை: மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் பேனர் வைத்து பிரசாரம் மேற்கொண்டுள்ளது ஆளும் அதிமுக அரசு. இது பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், இன்று முதல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கலந்தாய்வு நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. மேலும், கலந்தாய்வில் கலந்துகொள்ளும்  மாணவர்களுக்கும் அலுவலருக்கும் இடையே கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக பொதுப்பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு நடக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில்,  மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. கவுன்சிலிங்கை தொடங்கி வைக்கும் முதல்வர் , அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டின் கீழ், இன்று பிற்பகல் 45 மாணவர்களுக்கு முதல்வர் அனுமதி ஆணையை வழங்க உள்ளதாக தெரிகிறது.

முன்னதாக கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள வந்துள்ள மாணாக்கர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும்  உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் அதிமுக அரசு கொண்டுவந்துள்ள 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு காரணமாக தமிழக மாணவர்கள் பயன்பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை முன்னிலைப்படுத்தி அதிமுக சார்பில் நேரு ஸ்டேடியம் சுற்றிலும் பேனர்கள் வைத்து தேர்தல் பிரசாரத்தை செய்து வருகிறது.

இன்னும் 6 மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், பொதுமக்கள் மற்றும் மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பெற்றோர்கள், மாணவர்களியே அதிமுக மீதான கவனத்தை ஈர்க்க  வைக்கப்பட்டுள்ள பேனர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.