சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் மறைந்த அவைத்தலைவர் மசூதுனனுக்கு அஞ்சலி மற்றும்  இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களிலும்  செப்டம்பர் 15-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதையொட்டி புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக, உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. அதேற்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது ஆகியவை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக ஆலோசனை நடத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த 5-ந்தேதி தலைமை கழகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டடிருந்த நிலையில், அப்போது  அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நிலை  கவலைக்கிடமாக இருந்ததால்  கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, 11ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இதில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும்,  மனமாச்சரிங்களை கடந்து வெற்றிக்காக  பணியாற்றுங்கள் என எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கேட்டுக்கொண்டனர்.

அதன் பிறகு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இன்று மாலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்துகிறார்கள்.

நாளையும் (வியாழக்கிழமை)   விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

முன்னதாக இன்று கூட்டம் தொடங்கியதும்,  மறைந்த அதிமுக கழக அவை தலைவர் மதுசூதனன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று அதிமுக சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மகத்தான மக்கள் தொண்டரையும், புரட்சித் தலைவர் மீது மாறாப் பற்றுகொண்ட மாவீரரையும் இழந்திருக்கிறது.

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரியவராய், புரட்சித் தலைவி அம்மா அவர்களது வாழ்வில் இறுதி நிமிடம் வரை உறுதுணையாக இருந்தவர் கழக அவைத் தலைவர் மரியாதைக்குரிய இ. மதுசூதனன் அவர்கள்.

1953-ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினைத் தொடங்கி, அதனைத் தொடர்ந்து வட சென்னை பகுதியில் எம்.ஜி.ஆர். பெயரில் மன்றங்களை அமைத்து, சிறுவர்கள் படிக்கும் வண்ணம் எம்.ஜி.ஆர். பெயரில் இரவு பாடசாலைகளைத் தொடங்கி, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகள் அனைவராலும் “அஞ்சா நெஞ்சன்” என்று கம்பீரத்தோடு அழைக்கப்பட்ட இ. மதுசூதனன் அவர்கள், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், கழக கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு கழகப் பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு; சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் மிகச் சிறந்த முறையில் மக்கள் பணியாற்றியவர்.

மதுசூதனன் அவர்கள் ஆற்றிய பணிகள், கழகம் என்னும் ஆலமரம் வேர் விட்டு வளர, ஊற்றப்பட்ட கொள்கை நீராகும் என்பதை பெருமிதத்துடன் நினைவு கொள்கிறோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காப்பதிலும், தொண்டர்களுக்காக வாழ்வதிலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் நடைபோட்டு, மக்கள் தொண்டாற்றுவதிலும், நம் ஒவ்வொருவருக்கும் கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் அவர்கள் காலமெல்லாம் எடுத்துக்காட்டாய்த் திகழ்வார் என்பது உறுதி.

கழகத்தின் மூத்த முன்னோடி, போற்றுதலுக்குரிய தலைவர் மதுசூதனன் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, இந்த இரங்கல் தீர்மானத்தை உளம் உருக நிறைவேற்றுகிறோம். கழக அவைத் தலைவர்  இ. மதுசூதனன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுனம் காத்தனர்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.