சென்னை: எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரிய வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை சர்ச்சைக்கு இடையில், நீதிமன்ற அனுமதியில்   ஜூலை 11 அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடியது. இதில் எடப்பாடி பழனிச் சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுடன், கட்சி விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் ஒபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என  தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் சூர்யமூர்த்தி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கி இன்று  சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரிக்கப்பட இருந்தது. இந்த நிலையில், வழக்கை  2 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பதாக அறிவித்து உள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின்போது, வழக்கு தொடர்பாக  எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை படித்துப் பார்க்க,  மனுதாரரான அதிமுகவின் சூர்யமூர்த்தி அவகாசம் கோரியதை அடுத்து, மனுதாரருக்கு அவகாசம் வழங்கி, இதுதொடர்பான வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.