சென்னை:
திமுக பொதுக்குழு நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள், 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டனர்.

அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமைப் பதவி தொடர்பாக, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி – ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என, அனைவரும் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதைக் கண்ட பன்னீர்செல்வம், இன்று நடக்கவிருந்த பொதுக்குழுவை ஒத்தி வைக்கும்படி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்காத பழனிசாமி, ‘திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும்’ என பதில் அனுப்பினார்.

ஒ.பி.எஸ். தரப்பினர் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. முடிவில், பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த அனுமதி அளித்து,நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நேற்று இரவே ஒ.பி.எஸ். தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர், அதிமுக பொதுக்குழு நடத்த எந்த தடையும் இல்லை. பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம். மேலும் 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கக்கூடாது என்று குறிப்பிட்டனர்.