சென்னை:
சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது குறித்து நடவடிக்கை கோரி அமைச்சர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார். இந்நிலையில், அவர் விடுதலை ஆவதற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், பெங்களூரூ விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 31ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடியுடன் கூடிய காரில் புறப்பட்டார். இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி மற்றும் மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் புகாரளித்தனர். அதில், அதிமுக கொடியை சசிகலா இனி பயன்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.