சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இனிமேல் அதிமுகவில் யாரும் பொதுச்செயலாளராக வர முடியாது, அதற்கு கட்சியின் சட்டத்தில் இடமில்லை என்றும் வைத்திலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்து வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, கட்சியை கைப்பற்ற சசிலாக முயற்சித்தார். இதையடுத்து கட்சி இரண்டாக உடைந்தது. ஓபிஎஸ் ஜெ.சமாதியில் தியானம் இருந்து தர்மயுத்தம் செய்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையில் சசிகலா சிறைக்கு செல்ல எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. பின்னர், இரு தரப்பினரும் ஒன்றிணைந்து, இரட்டை தலைமையில் அதிமுக கட்சி செயல்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில், பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதிமுக கட்சியின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு புதிய பதவிகள் கொண்டுவரப்பட்டது. அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்சும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வருகின்றனர். இருந்தாலும், இருவருக்கும் இடையே இதுவரை முழுமையான ஒற்றுமை ஏற்படாமல் பனிப்போர் நிலவி வருகிறது. இதை அவர்கள் தனித்தனியாக வெளியிடும் அறிக்கைகள் மூலமே தெரிய வந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகரித்து வருகிறது. எதிர்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பதிலும் ஒபிஎஸ் இபிஎஸ் இருவரிடையே போட்டி இருந்தது. பின்னர் அது எடப்பாடி கைக்கு சென்றது. அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இரட்டை தலைமை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில் சசிகலாவும் தனது பங்குக்கு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த சர்சசைகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலரும் கேட்க தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த 14ந்தேதி (ஜூன்) அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலவலகத்தில் நடைபெற்றது. அதில், பல மாவட்டச்செயலாளர்கள் அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என வலியுறுத்தியதாக, கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அதுபோல மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, அதிமுக அலுவலகத்துக்கு வெளியில் திரண்டிருந்த தொண்டர்களில் ஒரு தரப்பினா் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டனா். மற்றோரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது. தற்போது எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியே அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என்றும் ஒரு தரப்பினரும், ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஒ.பன்னீர்செல்வமே ஒற்றை தலைமையாக வரவேண்டும் என்றும் மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான ஓபிஎஸ் ஆதரவாளரின் போஸ்டரை கிழித்ததாக, நேற்ற கிரின்வேஸ் சாலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே எடப்பாடி பழச்சாமியே ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும் என்று கூறி முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் உள்ளிட்ட பலரும் ஒ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், மணிகண்டன், ஆர்.பி உதயகுமார், வைத்தியலிங்கம் ஆகியோர் திடீரென ஓ.பி.எஸ். வீட்டுக்கு அதிமுக-வினர் படையெடுத்த நிகழ்வு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் , அதிமுகவில் ஒற்றைத் தலைமை பற்றி நாங்கள் பேசவில்லை.இ இனிமேல் யாரும் அதிமுக பொதுச்செயலாளராக வர முடியாது, அதற்கு கட்சியின் சட்டத்தில் இடமில்லை. அதனால் நாங்கள் வேறு சில விஷயங்கள் தொடர்பாக தான் ஆலோசனை நடத்தினோம் என்று கூறியவர், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சி தலைமை யார் என்பது குறித்து அவரவர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
எங்களுடைய கருத்து எல்லாம், கட்சி வலிமையாக இருக்க வேண்டும். ஜெயலலிதா விருப்பப்படி, அதிமுக நூறாண்டு காலம் நிலைத்திருக்க வேண்டும் என்பதே என்றும் தெரிவித்தார்.
இரட்டைத் தலைமையுடன் சென்று கொண்டிருந்த அதிமுக கட்சிக்குள் இப்போது, ஒற்றைத் தலைமை என்ற கோரிக்க, வெடிக்கத் துவங்கி உள்ளது கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.