புதுக்கோட்டை: புதுக்கோட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக அதிமுக – திமுக இடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சு நடைபெற்றது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது தடியடி நடத்தி அனைவரையும் விரட்டி அத்தனர். அதுபோல மதுரை உசிலம்பட்டி நகராட்சி தலைவர் தேர்தலிலும் கல்வீச்சு மோதல் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, சில வெற்றி வாய்ப்பு குறைந்த நகராட்சி, பேருராட்சிகளில் அதிமுக உள்பட மாற்றுக்கட்சியினரையும் இழுக்கும் நிகழ்வுகளும் அரங்கேறின. குதிரை பேரம் மிரட்டல் போன்றவைகளும் நடத்தப்பட்டன. இதனால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில், மாநகராட்சி நகராட்சியில் திமுக வெற்றி பெறும் நிலையில், பேருராட்சிகளில் சில பகுதிகளில் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதையடுத்து, அங்கும் தலைவர் பதவியை பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுக – திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்துக்குள் கல்வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதை தடுக்க வந்த காவல்துறையினருடன் திமுகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டுதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேரூராட்சியில் அதிமுக பெரும்பான்மையுடன் உள்ள நிலையில், தேர்தலை நடத்தவிடாமல் திமுகவினர் எதிர்ப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. கல்வீச்சு மற்றும் காவல்துறையின் தடியடியால் போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுக சாலை பொன்னம்மாள் வெற்றி பெற்றுள்ளார்.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி 1வது வார்டு அதிமுக வேட்பாளர் சாலை. பொன்னம்மா 51 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
இதுபோன்று மதுரை உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. உசிலம்பட்டி நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டி வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக வேட்பாளர் செல்விக்கு எதிராக திமுகவை சேர்ந்த சகுந்தலா மனு தாக்கல் செய்த நிலையில், கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.