சென்னை:
கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்து வந்த அதிமுக தேமுதிக கூட்டணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக, ஒரே நேரத்தில் திமுக தலைமை மற்றும் அதிமுக தலைமை யிடம் கூட்டணி தொடர்பாக தேமுதிக பேரம் பேசிய நிகழ்வு அம்பலமான நிலையில், தேமுதிக அதிமுக இடையே பேசப்பட்டுவந்த கூட்டணி மேலும் சிக்கலை உருவாக்கியது. இதன் காரணமாக இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது. தேமுதிகவுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் தேமுதிவுக்கான தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று மாலை, கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆழ்வார்பேட்டையிலுள்ள கிரவுன் பிளாசா ஓட்டலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக அமைச்சர்கள் மற்றும் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ் ஆகியோர் சென்றனர்.
அங்கு மீண்டும் தலைவர்கள் மட்டத்திலான ஆலோசனையை தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைமுதல்வர் ஓபிஎஸ், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய பிரேமலதா, 40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும், எங்கள் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று கூறினார்.