சென்னை: வருகிற  25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென அறிவித்து உள்ளார். இது அதிமுகவினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே  மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், தற்போது திடீரென மாவட்ட செயலாளர் கூட்டத்தை உடனடியாக கூட்டியிருப்பது பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   வருகிற 25-ந்தேதி  (வெள்ளிக்கிழமை)  மாலை 4.30 மணிக்கு கட்சியின்  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம்  என்பதுடன், ஏற்கனவே செயற்குழு கூட்டத்திற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த கூட்டத்தில் எடப்பாடி தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.