சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவி ஏற்பு இன்று காலை நடைபெற்று வருகிறது. இந்த பதவி ஏற்பின்போது  அதிமுக உறுப்பினர் பாட்டு பாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தையது. இதிமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் இது கச்சேரி இல்லை என குரல் எழுப்பினர்.

சென்னை  மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர் கள் இன்று பதவி ஏற்று வருகின்றனர். கவுன்சிலர்கள் பதவிப்பிரமாணம் செய்யும்போது, திமுக கவுன்சிலர்கள் ‘கலைஞர்’ கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டி பேசினர். அதுபோல சிலர்  இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் ராகுல்காந்தியை வாழ்த்தி கோஷமிட்டனர்.

இந்த நிலையில், 193வது வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  அதிமுக கவுன்சிலர் கோவிந்தசாமி  பதவி ஏற்கும்போது, எம்ஜிஆர் பாடல் ஒன்றை பாடினார். இது அங்கு அமர்ந்திருந்த கவுன்சிலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. சில திமுக கவுன்சிலர்கள் இது கச்சேரி இல்லை என்று சத்தம் போட்டனர். இதையடுத்து, அவரை பாடலை நிறுத்திவிட்டு பதவி ஏற்கும்படி மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார். அதன்பிறகே அவர் பதவி எற்றார்.