அ.தி.மு.க.கூட்டணி…:  யார்… யாருக்கு எந்த தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்?

சொல்லி வைத்த மாதிரி ரகசியமாக பேச்சு நடத்தி உடன்பாட்டை சுமுகமாய் முடித்து விட்டது –அ.தி.மு.க. ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியது தான் பாக்கி.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 25 தொகுதிகளை எடுத்துக்கொண்டுள்ள அ.தி.மு.க. அதில் மூன்றை புதிய நண்பர்களுக்கு கொடுக்க உள்ளது.

ஒருவர்-

புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அவருக்கு தென்காசி தனித்தொகுதி.

இன்னொருவர்- த.மா.கா.தலைவர் ஜி.கே,வாசன், அவருக்கு அநேகமாக தஞ்சை தொகுதி ஒதுக்கப்படலாம்

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரசுக்கு –பலத்த எதிர்ப்புக்கு இடையே –தாரை வார்க்கப்பட்டுள்ளது.அந்த தொகுதிக்காக பா.ம.க.போராடியது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு தன்னை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியிடம், புதுச்சேரியை தருவதாக எடப்பாடி பழனிச்சாமி வாக்கு கொடுத்திருந்தார்.

கொடுத்த வாக்கை காப்பாற்றி உள்ளார். அந்த தொகுதியில்- என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமி என்பவர் நிறுத்தப்படுகிறார்.

பா.ஜ.க.தனது பங்கில் இருந்து பா.ம.க.வுக்கு தர்மபுரி,அரக்கோணம்,ஆரணி மற்றும் விழுப்புரம் தொகுதியை அளிக்கும்.இந்த முறை தர்மபுரியில் அன்புமணி போட்டியிட வாய்ப்பு இல்லை.முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில் போட்டியிடுதற்கான வாய்ப்புகளே அதிகம்,

ஆரணியில் தனது மச்சான் விஷ்ணு பிரசாத் போட்டியிடாத பட்சத்தில்  அன்புமணி அங்கு நிற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  அரக்கோணத்தில் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுவார் என நம்பப்படுகிறது..

கள்ளக்குறிச்சி, கடலூர் , மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளை விஜயகாந்துக்கு கொடுக்கிறது பாஜக. கள்ளக்குறிச்சியில் எல்.கே.சுதீஷ்  தான் வேட்பாளர்.மற்ற வேட்பாளர்கள் விவரம் தெரியவில்லை.

கன்னியாகுமரி , கோவை ,தென் சென்னை, சிவகங்கை பெரம்பலூர், திருப்பூர், திருநெல்வேலி , ராமநாதபுரம்  ஆகிய 8 இடங்களில் பா.ஜ.க.போட்டியிடும்.

பெரம்பலூர் –பாரிவேந்தருக்கு ஒதுக்கப்படும்.

கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் ,கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன். திருப்பூரி ல் வானதி சீனிவாசன் ,நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது உறுதி.

தமிழிசையும்,எச்.ராஜாவும் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தெரிகிறது. எனவே தென் சென்னை , சிவகங்கை வேட்பாளர்கள் முடிவாகவில்லை.

–பாப்பாங்குளம் பாரதி