சென்னை: தமிழக அரசு, அரிசை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.2500 ரொக்கமும் வழங்கி வருகிறது. இதை அதிமுகவினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ரேஷன் கடைகள் முன்பு அதிமுக சார்பில் பேனர் வைத்துள்ளதாக, திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்தில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக, இலவசமாக 2500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று முதல், தமிழக ரேஷன் கடைகளில் அரிசை கார்டுதாரர்களுக்கு 2500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் நேற்றுமுதல் தொடங்கியது.
இதற்கான டோக்கன் விநியோகம் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், அதிமுகவினர் டோக்கன் கொடுப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திமுக நீதிமன்றத்தை நாடியது. அதையடுத்து, அரசு முத்திரையுடன்தான் டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், கட்சி சின்னத்துடன் கொடுக்கும் டோக்கன்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கக்கூடாது என உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுடு வரும் நிலையில், ரேஷன் கடைகள் முன் ஆளுங்கட்சியினர் பேனர் வைத்துள்ளனர். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவருவதாகவும், இது தொடர்பாக வழக்கு தொடர அனுமதி கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் .எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இதையடுத்து அரசு தரப்புக்கு அறிக்கை கொடுத்துவிட்டு வழக்கை தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்துள்ளது.