ஐநா அலுவலகத்திற்கு வெளியே நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக இந்தியர்கள் மற்றும் பலுசிஸ்தானியர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், ஐ.நா. சபையில் நடைபெற்ற 33-வது வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பலுசிஸ்தான் பிரச்சினையை இந்தியா எழுப்பியது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலும் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாகவும் இந்தியா குற்றம்சாட்டியது.
மேலும், பாகிஸ்தான் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை அனுப்பிவருவதாகவும் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அஜித்குமார் குற்றம் சாட்டினார்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பூர்வீக குடிமக்களை பாகிஸ்தான் ராணுவம் துன்புறுத்திவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்சினையில் சர்வதேச சமுதாயம் மற்றும் ஊடகங்கள் தலையிட வேண்டுமென பலுசிஸ்தான் மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இதையடுத்து, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்ற வந்தார். அப்போது ஐநா அலுவலகம் அமைந்துள்ள தெரு முழுவதும் கூடிய இந்தியர்கள் மற்றும் பலுசிஸ்தானை சேர்ந்தவர்கள், நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக கண்டனக்குரல்களை எழுப்பினார்கள்.
பாகிஸ்தான் நடத்தி வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும், பயங்கரவாதத்தை ஊக்குவித்து ஏற்றுமதி செய்வது ஆகியவற்றிற்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தினர்.
”டவுன் டவுன் பாகிஸ்தான்” , ”பலுசிஸ்தானை விடுதலை செய்” போன்ற கோஷங்களை ஆர்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.
”பாகிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதி உதவியை அமெரிக்கா நிறுத்த வேண்டும். காஷ்மீரில் உள்ள இந்துக்களும் மனிதர்களே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தி இருந்தனர்.