சென்னை:

சிறுமழை பெய்ததற்ககே சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாக மாறி உள்ளது. சுமார்   3ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் சமீப காலமாக பெய்த சிறுசிறு மழைகள் மற்றும், மின்சார வயர் கேபிள்கள் சாலையை தோண்டி புதைப்பது, கழிவுநீர் மற்றும் மழைநீர் சேகரிப்புக்காக சாலைகள் அவ்வப்போது வெட்டப்படும், சாலையோரப்ப பகுதிகள் தோண்டப்பட்டு வருவதும் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில் தெருக்களில் மின்சாரம், மழைநீர் சேகரிப்பு, குடிநீர், சாக்கடை நீர் பணிக்காக தோண்டப்படும் சாலைகளும், சரிவரி மூடப்படாமல் குண்டும் குழியுமாக மாறி உள்ளது.

இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் மின்சாரம், பொதுப்பணித்துறை, கழிவுநீர், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள், தோண்டப்பட்ட சாலைகளை சரிவர மூடாமல் செல்வதே பெரும்பாலான சாலைகள் சேதமாவதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு அரசிடம் இருந்து முறையாக அனுமதி பெற்றும், சாலையை செப்பனிட தேவையான பணமும் கட்டப்பட்டே சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதிகாரிகள் மற்றும் காண்டிராக்டர்காரர்களின் மெத்தனம் காரணமாக சாலைகள் உடைந்து நொறுங்கியும், குண்டும் குழியுமாக மாறி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்த  பள்ளங்களால் விபத்து ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. ஒருசில  மழைக்கே பல சாலைகள் சேதமடைந்துள்ளன.

சென்னை மாநகராட்சியின் கட்டுபாட்டில்  387.35 கி.மீ நீள பேருந்து வழிதட சாலைகள் உள்ளது. இதை தவிர்த்து 5623 கி.மீ நீள உட்புற சாலைகள்  உள்ளது. மேலும், நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலை, வால்டாக்ஸ் நெடுஞ்சாலை,  வேளச்சேரி மெயின்ரோடு, மணலி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, 100 அடி சாலை உட்பட 250 கி.மீ நீள சாலைகள் உள்ளது.

இந்த  சாலைகளை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ஆனால், சென்னையில் பெரும்பாலான சாலைகள் கடந்த பல ஆண்டுகளாக  புதுப்பிக்கப்படாமல் உள்ளதால் எங்கு பார்த்தாலும் மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால், அந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சாகச  பயணம் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிறு மழை பெய்தால், சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளை அவஸ்தைக்குள்ளாகி வருகிறது. சென்னையில் பேருந்துகள் இயக்கப்படும் சுமார் 100 சாலைகளும், உள்பகுதிகளில் உள்ள சாலைகள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சாலைகள்  செப்பனிடப்படுமா? சாலைகள் குண்டும் குழியுமாக மாற காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.