டெல்லி: மாநிலங்களவையில் வேளாண்சட்டம், விவசாயிகள் போராட்டம் குறித்து நேற்று விவாதிக்க மறுத்த காரணத்தால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று சபை நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று சபையில் வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி வழங்கினார்.
இன்று காலை அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. அவை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை சிறிதுநேரம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்த பிரச்சினை தொடர்பாக நாடாளுமுன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நடவடிக்கை எடுத்தார்.
மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கேள்வி நேரத்தை ரத்து செய்து வேளாண் சட்டம் தொடர்பாக விவாதிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என மாநிலங்களவை தலைவர் அறிவித்தார். அதன்படி வேளாண் சட்டம் குறித்து விவாதிக்க 15 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டன.
இதனைத் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது.
முன்னதாக, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பிக்கள் சஞ்சய் சிங், நரைன் தாஸ் குப்தா மற்றும் சுஷில் குமார் குப்தா ஆகியோர், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை அமைதியாக இருக்கும்படி அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். ஆனால் எம்பிக்கள் கேட்கவில்லை. இதனால் டென்சன் ஆன வெங்கையா நாயுடு, ‘என் பொறுமையை சோதிக்க வேண்டாம். இப்படி செய்தால், நான் உங்கள் பெயர்களை குறிப்பிட்டு, இன்று நாள் முழுவதும் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்வதற்கு 255வது விதியை பயன்படுத்த நேரிடும்’ என எச்சரித்தார்.
ஆனால், அவரது எச்சரிக்கையை உறுப்பினர்கள் மதிக்காமல் தொடர்ந்து முழுக்கம் எழுப்பினர். இதையடுத்து, ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த 3 எம்பிக்களையும் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக அவைத்தலைவர் அறிவித்தார். அவர்கள் உடனடியாக அவையைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அவை நடவடிக்கையை சிறிது நேரம் ஒத்திவைத்தார்.