டில்லி

ங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மாநிலங்களில் விவசாய உற்பத்தி வரும் 2040க்குள் மும்மடங்கு குறையும் எனஉலக வங்கிக் குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய ஜீவ நதி கங்கை ஆகும்.   பெரும்பாலான வட மாநிலங்களில் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு கங்கை நதி நீராதாரமாக உள்ளது.   இந்தியாவில் உள்ள நதி நீர் வளத்தில் 90% கங்கை நதியில் இருந்தே கிடைக்கிறது.  ஆனால்  இந்த கங்கை நதி நீர் மாசு படுவதாகவும் நீரின் அளவும் குறைவதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆராய உலக வங்கியால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு, “கங்கை நதியில் மாசு படுதல் தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.   இதனால் இந்த நதிநீர் குடிநீருக்கும் விவசாயத்துக்கும் பயன்படுதத முடியாத நிலையை சிறிது சிறிதாக அடைந்து வருகிறது.    இதனால் நதி நீர் மட்டுமின்றி நிலத்தடி நீரும் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நதி நீரின் அளவும் குறைந்து வருகிறது.   இவ்வாறு நீரின் அளவு குறையும் போது அது நிலத்தடி நீரின் மட்டத்தை வெகுவாக குறைக்கும்.   நாட்டில் தற்போது நிலத்தடி நீரை எடுப்பது அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு நிலத்தடி நீர் மட்டம் குறைவது ஒரு அபாயகரமான விஷயமாகும்.   தற்போதுள்ள நிலையை விட நதி நீர் அளவு மேலும் குறைய வாயப்புள்ளது.

நீர் பற்றாக்குறையால் கங்கை நதிக்கரையில் உள்ள மாநிலங்களில் விவசாய உற்பத்தி குறைந்து வருகிறது.   வரும் 2040க்குள் இந்த மாநிலங்களில் விவசாய உற்பத்தி மும்மடங்கு குறையும் அபாயம் உள்ளது.   அத்துடன் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் கடும் குடிநீர்  பஞ்சத்தில் தவிக்க நேரிடும்.

வரும் 2040க்குள் கங்கை நதி நீர் அளவு இந்த மாநிலங்களில் தற்போதுள்ள நிலையில் சுமார் 10% முதல் 28% வரை மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.  அது மட்டுமின்றி இந்த காலகட்டத்தில் மத்திய பிரதேசம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் நீர் அளவு குறைந்து கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ” என தெரிவித்துள்ளது.