சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்தில், ரூ184 கோடி மதிப்பீட்டில் வேளாண் துறை கட்டிடங்கள்; ரூ.11 கோடி மதிப்பில் வேளாண் காடுகள் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.183.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும், ரூ.11 கோடி மதிப்பிலான புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (16.11.2021) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 147 கோடியே 78 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், ஏலக்கூடங்கள், சுத்தப்படுத்தித் தரம் பிரிக்கும் கூடங்கள், விவசாயிகளுக்கான ஓய்வு அறைகள் மற்றும் விற்பனை அலுவலகங்கள், 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிலையங்களில் 12 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விக் கட்டிடங்கள் மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழக வரலாற்றில் முதல் முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை கடந்த 14.8.2021 அன்று தாக்கல் செய்யப்பட்டு, உழவர்களின் நலனைப் பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்தும் இலக்கினை அடைந்திடவும், வேளாண் பெருமக்களின் வருவாயைப் பன்மடங்காக உயர்த்திடவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு மாநில விற்பனை வாரியம் மூலம் அரியலூர் மாவட்டம் – ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம், கோயம்புத்தூர் மாவட்டம் – கிணத்துக்கடவு மற்றும் செஞ்சேரி, தொண்டாமுத்தூர், கடலூர் மாவட்டம் – பண்ருட்டி மற்றும் சேத்தியாதோப்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் – போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை, திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் மற்றும் வடமதுரை (அய்யலூர்), ஈரோடு மாவட்டம் – நாதிபாளையம், காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் தியாகதுருகம், மதுரை மாவட்டம் – மேலூர்,
நாகப்பட்டினம் மாவட்டம் – செம்பணார்கோயில் மற்றும் திருப்பூண்டி, புதுக்கோட்டை மாவட்டம் – ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி, ராமநாதபுரம் மாவட்டம் – ராமநாதபுரம் மற்றும் ராசசிங்கமங்கலம், சேலம் மாவட்டம் – கருமந்துறை, சிவகங்கை மாவட்டம் – சிவகங்கை, தேவக்கோட்டை மற்றும் காரைக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் – பூதலூர், திருவள்ளூர் மாவட்டம் – திருவள்ளூர், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை, திருப்பூர் மாவட்டம் – அவினாசி, காங்கேயம் மற்றும் பெதப்பம்பட்டி,
திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி, தேனி மாவட்டம் – தேனி, திருவண்ணாமலை மாவட்டம் – ஆரணி, சேத்துப்பட்டு, செய்யாறு, கண்ணமங்கலம், மங்களமாமண்டூர், வந்தவாசி மற்றும் வேட்டவலம், தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம், விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டை, ராஜபாளையம் மற்றும் சாத்தூர் ஆகிய இடங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 147 கோடியே 78 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், ஏலக்கூடங்கள், சுத்தப்படுத்தித் தரம் பிரிக்கும் கூடங்கள், விவசாயிகளுக்கான ஓய்வு அறைகள் மற்றும் விற்பனை அலுவலகங்கள்;
கிருஷ்ணகிரி மாவட்டம் – பர்கூர், திருவள்ளூர் மாவட்டம் – மீஞ்சூர், வேலூர் மாவட்டம் – பேர்ணாம்பட்டு, மதுரை மாவட்டம் – சேடப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் – ஆவுடையார்கோயில் மற்றும் திருமயம், கடலூர் மாவட்டம் – பரங்கிப்பேட்டை, விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம், திண்டுக்கல் மாவட்டம் – நத்தம் மற்றும் நிலக்கோட்டை ஆகிய இடங்களில் 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்;
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் திருச்சிராப்பள்ளி – அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான மையம், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன்- தேசிய பயறு ஆராய்ச்சி நிலையத்தில் 5 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்களுடன் கூடிய நிர்வாகக் கட்டிடம் மற்றும் மாணவர்கள் படிப்பு மையம், கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை – தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் 1 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் படிப்பு மையம், விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறை; விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம் என மொத்தம் 183 கோடியே 73 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதுபோல், ரூ.11 கோடி மதிப்பில்வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் குறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.11.2021) தலைமைச் செயலகத்தில், “தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்” என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தினை (Agro forest) ரூ.11.14 கோடி மதிப்பில் 73 இலட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகிப்பதன் துவக்கமாக விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ் நடவு செய்யப்படும் மரக்கன்றுகள் எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வருமானம் கிடைக்க வழிவகுப்பதோடு மண் வளம் அதிகரித்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த பசுமைப் பரப்பும், சுற்றுப்புறச் சூழலும் மேம்படும்.
விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு வகுத்து, செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மானாவாரி நிலத் தொகுப்புகளில் பயன்தரும் மரக்கன்றுகளை வளர்க்கும் முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும் நோக்கத்துடன், “தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்” (Tamil Nadu Mission on Sustainable Green Cover in Farm Lands) என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தினை 2021-2022 ஆம் ஆண்டில் ரூ.11.14 கோடி மதிப்பில் செயல்படுத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் போன்ற பல்வேறு தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். நடப்பாண்டில், முதற்கட்டமாக 73 இலட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு வனத்துறையின் நாற்றங்கால்களில் ரூ.15/- மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
இம்மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களின் வரப்புகளிலோ அல்லது குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலோ நடவு செய்யலாம். வரப்பில் நடவு செய்வதாக இருந்தால், ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் குறைந்த செறிவில் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும்.
மேலும், நடவு செய்த 2-ஆம் ஆண்டு முதல் 4-ஆம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7/- வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இம்மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் போது, வனத்துறையின் அனுமதியை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில், நடவுசெய்த மரக்கன்றுகள் அனைத்தும் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி வாயிலாகவோ தங்கள் பெயரை பதிவு செய்து உரிய அலுவலரின் பரிந்துரையின்படி தேவையான மரக்கன்றுகளை அருகிலுள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை உற்பத்தி ஆணையரும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளருமான சி.சமயமூர்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் முனைவர் எஸ்.நடராஜன், வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.