டெல்லி: அக்னிபாத்தில் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைஃபிள் பிரிவில் 10சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்பதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர், 12க்கும் மேற்பட்ட ரயில்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் திட்டம் இளைஞர்கள் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டது என மத்தியஅரசும், ராணுவ தளபதி உள்பட பலர் ஆதரவு தெரிவித்தாலும், இளைஞர்கள் மத்தியில் தங்களது ராணுவ வீரருக்கான கனவை பொய்யாக்குவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, அதற்கான வயது வரம்பை 23ஆக உயர்த்தி மத்தியஅரசு அறிவித்தது. இருந்தாலும் போராட்டம் குறையாத நிலையில், தற்போது புதிய அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, அக்னி வீரர்களுக்கு மத்திய ஆயுதப் படை மற்றும் அசாம் ரைஃபிள் பிரிவிலுள்ள காலியிடங்களில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும், அக்னி வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது உச்ச வரம்பிலிருந்து 5 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்படவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.