டெல்லி:  மக்களவை தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,  பாஜக அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும், பெண்களுக்கு மானியம், 30லட்சம் வேலை வாய்ப்புகள்,   ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாது, மாணவர்கள் கல்வி கடன் ரத்து  உள்பட ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி உள்ளது.

 தங்களது தேர்தல் அறிக்கை,  நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டது, இந்த அறிக்கையை மட்டுமே நாங்கள் எழுதியுள்ளோம், ஆயிரக்கணக்கான மக்களிடம் பேசி எங்கள் தேர்தல் அறிக்கையை உருவாக்கியுள்ளோம் என்று ராகுல்காந்தி கூறினார்.

நாட்டில், தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடையும் நிலையில்,  18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு , அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மக்களவை தேர்தல்,  நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  அதன்படி,, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது.  2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும்,  3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும்  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி, மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி,  ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் பிரதமர் மோடியின் வியூகத்தின் அடித்தளத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். துறைமுகங்கள், உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் அதானிக்கு எப்படி ஏகபோக உரிமை இருக்கிறதோ, அதேபோல் பிரதமர் மோடியும் ஏகபோகத்தை உருவாக்கியுள்ளார் என்றார்.

மேலும்,  தங்களது தேர்தல் அறிக்கை,  நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டது, இந்த அறிக்கையை மட்டுமே நாங்கள் எழுதியுள்ளோம், ஆயிரக்கணக்கான மக்களிடம் பேசி எங்கள் தேர்தல் அறிக்கையை உருவாக்கியுள்ளோம் என்றவர், பாரத் நியாய் யாத்திரையின்போது கூறி உறுதிமொழிப்படி, ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதாகவும்,  எம்எஸ்பிக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் கூறினாரி.

https://twitter.com/i/broadcasts/1dRJZEneAroGB

காங்கிரஸ் தலைவர் கார்கே பேசும்போது,  ED, CBI, Income Tax ஆகியவற்றைப் பயன்படுத்தி அரசியல் நிதி பெற்றுள்ளது என்று குற்றம் சாட்டியவர், பிரதமர் மோடி அரசியல் நிதி ஏகபோகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதே காரணம் என்றும்  ஊழல் செய்பவர்கள் பாஜகவில் இணைகிறார்கள் என்று  கூறினார்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,  முப்படை வீரர்களை தேர்வு செய்யும் அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும்,   ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப் படுத்தப்படாது – பழைய முறையே தொடரும். மாநில அரசுகள் விருப்பப்பட்டால் மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். புதுச்சேரி மற்றும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ழை பெண்களுக்கு #ஆண்டுக்கு ஒரு லட்சம், அரசு பணிகளுக்கான #தேர்வு கட்டணம் ரத்து.. பாஜகவை வீழ்த்தும் வகையில் #காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!! #Congress #Elections2024 #LokSab

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். மக்களவை தேர்தலுக்காக 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள் அளித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், சமூக நீதியை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விவரம்:

ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.

மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் வேலை வாய்ப்புகளை நிரப்புவோம்

2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும்

நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை.

மாநிலஅரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம்.

அரசு தேர்வுகள் விண்ணப்பக் கட்டணத்தை காங்கிரஸ் ரத்து செய்யும்

21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்

மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக்கடன்களும் ரத்து செய்யப்படும் .

மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைகளையும் வகையில் ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்

தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தனி சட்டம்

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்

டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு பொதுத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும்

பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

அங்கன்வாடி ஊழியர்கள் இரட்டிப்பாக்கப்படும். அங்கன்வாடியில் கூடுதலாக 14 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

மனித கழிவுகளை மனிதரே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும்.

2025 முதல் மத்திய அரசு பணிகளில் 50% பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்

தனிநபர் சட்டங்களில் வரும் மாற்றம், அனைத்து சமுதாயத்தினரின் சம்மதம் பெற்ற பிறகே மேற்கொள்ளப்படும்

முதியவர்கள், விதவைப் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் பென்ஷன் ரூ.1000 உயர்த்தப்படும்

மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைகளை களையும் வகையில் மறு ஆய்வு

அனைத்து மொழிகளிலும் பிரெய்லி மற்றும் சமிக்ஞை அங்கீகரிக்கப்படும்

அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்

பழகுநர் பயிற்சி மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் தொகை வழங்கப்படும்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். எல்ஜிபிடி சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும்.

உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படும்.

பாஜக கொண்டுவந்த ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு வணிகர்களுக்கு ஏற்ற புதிய ஜி.எஸ்.டி. (2.0) கொண்டுவரப்படும்.

*மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியம் ரூ.400-ஆக உயர்த்தப்படும்.

நகர்ப்புறங்களிலும் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ.25 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையை மாநில | அரசுகளுடன் ஆலோசித்து திருத்தி அமைக்கப்படும்.

அனைத்து கடலோர பகுதிகளிலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

முப்படை வீரர்களை தேர்வு செய்யும் அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினால் தானே பதவி இழக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

வாக்களிக்கும்போது வாக்காளர் ஒப்புகைச் சீட்டை பார்த்த பிறகு பெட்டியில் போடும் நடைமுறை அமல்படுத்தப்படும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படாது .

அனைத்து விசாரணை அமைப்புகளும் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து மக்கள் விரோத சட்டங்களிலும் திருத்தம் செய்யப்படும்.

நிதி ஆயோக் திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும்.

பண மதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

பா.ஜ.க. ஆட்சியில் வெளிநாடுகளுக்கு குற்றவாளிகள் தப்பிச்சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும்.

பா.ஜ.க.வுக்கு மாறியதால் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.

தேர்தல் பத்திர முறைகேடு, பி.எம். கேர்ஸ், ராணுவ ஒப்பந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும்.

பால்புதுமையினர் (LGBTQIA+) நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கான சட்டம் இயற்றப்படும்

பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும்

செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை

உள்பட ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.