சென்னை: மக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் வெயில் இன்று (மே 4ந்தேதி) தொடங்கியது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெயிலிலும், வெளியிலும் செல்வதை தவிர்ப்பது நல்லது. அடுத்த 25 நாட்கள் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நலம்.
இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் சுட்டெரிக்கும் கத்திரி வெயில் ஆரம்பமாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில், சூரியனின் வீரியம் உச்சம் பெற்றிருக்கும், இதனால் பூமியில் உஷ்ணம் அதிகரித்து அனல்காற்று வீசும். இதனால் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, கத்திரி வெயில் காலத்தில்தான் கோடைக் காலத்தில் மிக அதிக வெப்பம் உணரப்படுவது வழக்கம்.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் தேவையின்றி வெளியே நடமாடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அக்னி நட்சத்திரமும் தொடங்கி உள்ளது. சென்னை போன்ற மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில், சாதாரண வீடுகளில் குடியிருந்து வரும் மக்கள், கடும் பாதிப்புக்குள்ளாவார்கள். தற்போது கொரோனா காலம் என்பதால், மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.
ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில், இன்றுமுதல் அது மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் க்னி நட்சத்திரம் (Agni Natchathiram) தொடங்குவதற்கு முன்பே அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது.
நடப்பாண்டு அக்னி நட்சத்திரம் இன்று (மே 4-ந் தேதி) தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. 26 நாட்கள் நீடிக்கும் அக்னி வெயிலின் தாக்கத்தின்போது, பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை கருதியும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டும் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.