புதுடெல்லி: சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அகர்பத்தி சார்ந்த மூலப் பொருட்களால் அத்தொழில்துறை பெரும் பாதிப்படைவதோடு, பலரும் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காதி மற்றும் கிராமிய தொழில்துறை ஆணையம் வெளியிட்ட தரவுகளின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் ரூ.6000 கோடி மதிப்புள்ள உள்நாட்டு அகர்பத்தி தொழில்துறையானது, கடந்த 2018ம் ஆண்டில், ரூ.800 கோடி மதிப்பிலான அகர்பத்தி குச்சிகள் உள்ளிட்ட அகர்பத்தி சார்ந்த மூலப் பொருட்களை இறக்குமதி செய்தது.
இதனால், உள்நாட்டில் பல அகர்பத்தி திட்டங்கள் ரத்தாதல் மற்றும் வேலையிழப்பு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.
அகர்பத்திக்கு தேவையான வட்ட மூங்கில் குச்சிகளின் இறக்குமதி மதிப்பு கடந்த 2008 முதல் 2011 காலகட்டம் வரை வெறும் ரூ.1 கோடிக்கும் குறைவாகவே இருந்தது.
ஆனால், கடந்த 2014-2018 காலகட்டத்தில், அந்த வட்ட மூங்கில் குச்சியின் இறக்குமதி மதிப்பு ரூ.129 கோடி என்ற அளவிற்கு அதிகரித்துவிட்டது. இறக்குமதி மீதான வரிகள் குறைக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அகர்பத்தி பொருட்களுக்கான இறக்குமதி வரி, 30% என்பதிலிருந்து 10% என்பதாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.