2019 ம் பிப்ரவரி 15 ம் தேதி டெல்லி முதல் வாரணாசி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எனும் அதிவேக ரயிலை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

இந்தியாவிலேயே அதிவேக ரயில் என்று புகழப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் விமானத்தில் உள்ள வசதிகளுடன் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

2022 ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 400 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா அறிவித்தார்.

ஆகஸ்ட் – செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 7 அல்லது 8 வந்தே பாரத் ரயில்கள் புதிதாக இயக்கப்படும் என்றும் கூறினார்.

மாதம் 7 அல்லது 8 ரயில்கள் மூலம் மூன்றாண்டுகளில் 400 என்ற இலக்கை எப்படி அடையமுடியும் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

தற்போது வரை டெல்லி – வாரணாசி மற்றும் டெல்லி – வைஷ்ணோதேவி ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

கடந்த மாதம் சென்னை ஐ.சி.எப். பணிமனையை பார்வையிட்ட அஸ்வினி வைஷ்ணவா 2023 ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.

2021 ம் ஆண்டு சுதந்திர தின உரையில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வாரங்களில் 75 ரயில்கள் இயக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.