சென்னை

இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்து வருகின்றன.   கொரோனா காலத்தில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது.

ஆனால் அப்போது இந்தியாவில் வரி அதிகரிப்பு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையவில்லை.  கடந்த சில நாட்களாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.  இதையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரித்து வருகிறது.

இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.  இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.100.23க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர்  விலை ரூ.95.59 ஆகி உள்ளது.   இது பொதுமக்களைக் கலக்கம் அடைய வைத்துள்ளது.