சென்னை

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய, திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,  தமிழகத்தில் மீண்டும் மெரினா புரட்சி வெடிக்கும் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவருடன் மாநிலங்களவை எம்.பி.யுமான கனிமொழி, மாவட்ட செயலா ளர்கள், திமுக எம்எல்ஏக்கள் உள்பட 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, மு.க.ஸடாலின் பேசியதாவது,

மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காக்கிறது. இது திமுக.,வின் போராட்டம் மட்டும் அல்ல. தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சிகள் சார்பிலும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

ஏற்கனவே தமிழக விவசாயிகள் வறட்சி உள்ளிட்ட பல விவகாரங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சமயத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் பா.ஜ., அரசு இந்த தடையை கொண்டு வந்துள்ளது.

பா.ஜ., அரசின் 3 ஆண்டு ஆட்சியில் சாதனைகளை விட சோதனைகளே அதிகம் உள்ளன. மோடி அரசின் சாதனை என எதுவும் இல்லை.

வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் சேர்ப்போம் என்றார்கள். 15 ரூபாயாவது போட்டார்களா.

மோடி விரும்புவதை தான் நாம் சாப்பிட வேண்டும் என்றால் தனிமனித உரிமை பறிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

சுதந்திர நாட்டில் வாழ்வதாக கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது போன்ற தடைகளால் தனிமனித உரிமை பறிக்கப்படுகிறது.

மாட்டிறைச்சி தடை சட்டத்தை கொண்டு வரும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு என கூறிய மத்திய அரசு, தற்போது அரசிய சட்டம் உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்கிறது.

மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக மாடு விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படு கின்றன. 3 ஆண்டுகளில் எதுவும் செய்யாததை மூடி மறைக்கவே இந்த தடை உத்தரவு.

கடந்த 6 ஆண்டுகளில் 3 முதல்வர்கள் 5 முறை பிரதமரை சந்தித்துள்ளனர். ஆனால் தமிழக வளர்ச்சி திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

வெங்கைய நாயுடு தலைமை செயலகத்தில் ஆய்வு செய்து விட்டு, எச்சரிக்கையும் செய்து விட்டு சென்றுள்ளார். தமிழக அரசு ஒழுங்காக செயல்பட வேண்டும் என மத்திய அரசு எச்சரிப்பது வெட்கக் கேடானது. மோடி ஆட்சியில் முதல்வர் எல்லாம் நகராட்சி தலைவர்கள் ஆகி விட்டனர். இந்த தடை கொண்டு வந்து 8 நாட்கள் ஆகிறது.

மற்ற மாநில முதல்வர்கள் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து விட்டனர்.

ஆனால் தமிழக முதல்வரோ தடை உத்தரவை முழுமையாக படித்து பார்த்து விட்டு தான் சொல்வோம் என்கிறார்.

இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் மெரினா புரட்சி போன்று மற்றொரு புரட்சி உருவாகும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.